தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணல் திருட்டை தடுக்காத ஆட்சியர் மீது அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம்

2 mins read
156e5845-e6e2-4f4c-ae4d-8f5b8faeeb4c
தமிழகத்தில் உள்ள ஆற்றுப் படுகைகளில் நடந்து வரும் மணல் கொள்ளையைத் தடுக்க தொண்டூழிய அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: ஆற்றுப்படுகையில் நடக்கும் மணல் திருட்டைத் தடுக்கவில்லை என்றால் ஆட்சியர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் மணல், சவுடு மண் கொள்ளையை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு எதிராக அவமதிப்பு வழக்குத் தொடர மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப் படுகைகள் மற்றும் மெய்யூர், வேம்பேடு, ராஜபாளையம், சோமதேவன்பட்டு, எறையூர் போன்ற சிற்றூர்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும் சவுடு மண் இரவு, பகலாக திருடப்பட்டு வருவதற்கு எதிராக கொசஸ்தலை ஆறு மற்றும் கனிமவள பாதுகாப்பு சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், மணல் திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டிய வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளே அதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும், குறிப்பாக அரசு புறம்போக்கு நிலங்களில் அதிகளவில் மணல் மற்றும் சவுடு மண் அள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில், உரிமங்களில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே மணல் மற்றும் சவுடு மண் அள்ளப்பட்டு வருவதாக வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் குழு, கொசஸ்தலை ஆற்றுப்படுகைகள் மற்றும் மணல் அள்ளப்படும் ஊர்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக மணல் அள்ளப்பட்டால் அதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அதிகாரிகள் தங்களது கடமையை செய்யத் தவறினால் மனுதாரர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

வைகை, தாமிரபரணி, காவிரி உட்பட முக்கிய ஆறுகளையொட்டிய ஊர்களில் லாரிகள் மூலம் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடக்கிறது. மேலும், அரசியல்வாதிகள், செங்கல் சூளை உரிமையாளர்கள் தனியார் நிலங்களில் சவடு மண் எடுக்க அனுமதிபெற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்