தனிச்சின்னத்தில்தான் போட்டி: வைகோ

தனிச்சின்னத்தில்தான் போட்டி: வைகோ

1 mins read
70049d39-8c19-4688-a7d2-4d6a7745e0bc
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) வரும் தேர்தலில் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்பதில் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதிப் பங்கீடு குறித்தும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பின் போது மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார் வைகோ.

மறைந்த தலைவர் காயிதே மில்லத் பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பது குறித்தும் வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ளவர்கள், விவசாயிகளுக்குச் சூரிய சக்தி மூலம் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்தும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வைகோவின் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதல்வர், அவற்றை நிச்சயம் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக உறுதியளித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய வைகோ, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும்போது இடங்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும் என்றார்.

முக்கியமாக, “மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என எங்கள் அவைத்தலைவர் ஏற்கெனவே கூறியுள்ளார். அதுவே கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு,” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பாஜக குறித்துப் பேசிய அவர், பிரதமர் மோடி தமிழகத்திற்கு எத்தனை முறை காவடி தூக்கி வந்தாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றும் தமிழக மக்களை அவர்களால் ஏமாற்ற முடியாது என்றும் விமர்சித்தார்.

குறிப்புச் சொற்கள்