தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காமராஜர் குறித்த சர்ச்சை கருத்து: திமுக, காங்கிரஸ் இடையே மோதல்

2 mins read
f41373ac-e1f3-4e5c-9957-214a6971f6fc
திருச்சியில் உள்ள சிவாவின் வீட்டை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. - படம்: ஊடகம்

சென்னை: காலஞ்சென்ற தமிழக முதல்வர் காமராஜர் குறித்து, திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்த கருத்து, காங்கிரஸ், திமுக கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவா தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருச்சியில் உள்ள சிவாவின் வீட்டை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

அண்மையில், சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருச்சி சிவா, காமராஜருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால் உடலில் ஒவ்வாமை ஏற்படும் என்றும் எனவே அவர் தங்கும் அனைத்து அரசுப் பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய கருணாநிதி உத்தரவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், காமராஜர் உயிரிழக்கும் முன்பு, அன்றைய முதல்வர் கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘ஜனநாயகத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டதாகவும் திருச்சி சிவா கூறியிருந்தார்.

இது காங்கிரசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் வீட்டை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் காங்கிரசார் முற்றுகையிட முயன்றனர். இதனால் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள், திருச்சி சிவாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ், திமுக இடையேயான கூட்டணி பலமடைந்து வருகிறது.

இந்நிலையில், திருச்சி சிவாவின் பேச்சு இந்த உறவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என தமிழக பாஜக கூறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

“காமராஜர் குறித்த சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? அதை வைத்து அவதூறு பரப்புவது யார்? உங்களுடைய நோக்கம் என்னவென்று நன்றாகத் தெரிகிறது. நடிக்காதீர்கள் ஸ்டாலின்,” என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

“காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்