சென்னை: இந்தி மொழியை மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வேலை வாய்ப்பின்மைக்கு வழிவகுப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்கள், ஆண்கள் என்று பேதமின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் கல்வி அறிவு விகிதம் உயரவும் மாநிலத்தில் பணியாளர்கள் சக்தியில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கவும் சம கல்வி வாய்ப்பைத் தருவதே முக்கியக் காரணி,” என்றார் அவர்.
ஆங்கிலக் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவது மாணவர்களின் வாய்ப்புகள், எதிர்காலத்துக்கு முட்டுக்கட்டை போடுவது போலாகிவிடும். மொழி ரீதியிலான தடைகள், எப்போதுமே வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் தடைபோடும் என்றார் தயாநிதிமாறன்.
இந்நிலையில் தயாநிதி மாறனின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தி பேசுபவர்களைக் கல்வி அறிவு இல்லாதவர்கள்போல் தயாநிதி சித்திரித்துள்ளதாகத் தமிழக பாஜக நிர்வாகி திருப்பதி நாராயணன் கூறியுள்ளார்.
தனது கருத்துக்காக இந்திய மக்களிடம், குறிப்பாக இந்தி பேசும் மக்களிடம் தயாநிதி மாறன் மன்னிப்பு கோர வேண்டும் என திரு நாராயணன் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே திமுக மூத்த தலைவரான டிகேஎஸ் இளங்கோவன் பெண்கள் உரிமைக்காக திமுக நீண்ட காலமாகப் போராடி வருவதாகக் குறிப்பிட்டார். தயாநிதி மாறன் இந்த கருத்தைத்தான் வெளிப்படுத்தி உள்ளார் என அவர் கூறினார்.

