தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுக ஆட்சியை பற்றி ஊழல் இலக்கியமே எழுதலாம்: விஜய் காட்டம்

2 mins read
37c25178-a8de-4b52-bba7-8644c1e42433
தவெக தலைவர் விஜய். - படம்: ஊடகம்

சென்னை: திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு அமலாக்கத்துறையின் அறிக்கையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு, மோசடிகள் குறித்து நியாயமாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக எதிர்க்கட்சிகள், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடுகளைச் செய்ய முடியும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

“மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் திமுக அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

“எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர். ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே திமுகவின் ஆட்சி அதிகார வரலாறு,” என்று விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.

தீவிரமாக ஆராய்ந்தால், டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம் என்று தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி குறித்து விஜய் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்