ஊழல் புகார்: முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் காவல்துறை சோதனை

ஊழல் புகார்: முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் காவல்துறை சோதனை

1 of 2
படம்: இந்து தமிழ் திசை
படம்: விகடன்

20 Nov 2026 - 5:49 pm

2 mins read

மதுரை: கல்குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் இல்லங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த திமுக ஆட்சியில் வணிக வரி, பதிவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் பி. மூர்த்தி. அப்போது மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் அமைந்துள்ள செம்மண், கல்குவாரிகளில் விதிகளுக்குப் புறம்பாகச் செம்மண், கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அப்புகாரின் அடிப்படையில், திரு மூர்த்தி மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

அதையடுத்து, குவாரி விதிமீறல் விவகாரம் தொடர்பாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது கல்குவாரி ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

கல்குவாரி ஒப்பந்தங்கள், விதிமீறல் குற்றச்சாட்டுகள் குறித்துக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திமுக முன்னாள் அமைச்சர்மீது தமிழக அரசு பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பாக கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என். நேரு, துரைமுருகன் உள்ளிட்டோர் மீது ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைகளை மேற்கொண்டு பல்வேறு முக்கியமான ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீதான வழக்கு விசாரணையின்போது, அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் மூர்த்தி மீதான ஊழல் புகார் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் திமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சோதனையின்போது கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில், திரு மூர்த்தி மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்
திமுகஅமைச்சர்கல்குவாரிஊழல்காவல்துறைசோதனை