சென்னை: இருபது குழந்தைகளின் உயிரைப் பறித்த ‘கோல்டிரிஃப்’ இருமல் மருந்தைத் தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ‘ஸ்ரீசன் ஃபார்மா’ என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் ‘டைஎத்திலீன் கிளைக்கால்’ எனும் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த மருந்தை உட்கொண்ட பல குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 5 வயதுக்கு உட்பட்ட 20 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். மேலும், ஆறு குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட ‘டைஎத்திலீன் கிளைக்கால்’ வேதிப்பொருள் 500 மடங்கு அதிகம் இருந்ததே குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதியானது.
இந்நிலையில், மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை புதன்கிழமை (அக்டோபர் 8) காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.
சென்னை காவல்துறை உதவியோடு இந்த நடவடிக்கையை மேற்கொண்ட மத்தியப் பிரதேச காவல்துறையினர், சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த ரங்கநாதனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்த பல மாநிலங்களுக்கு ‘கோல்டிரிஃப்’ இருமல் மருந்து விநியோகிக்கப்பட்டது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்திலும் மருத்துவர்கள் இம்மருந்தை குழந்தைகளுக்கு வழங்க பரிந்துரைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, ரங்கநாதன் மீது அம்மாநில காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் உடனடியாக மத்தியப் பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார் என அம்மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் பாண்டே கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
இந்தியாவில் மருந்து உற்பத்தியாளர்கள், அதற்குத் தேவைப்படும் மூலப் பொருள்களையும் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ள மருந்துகளையும் பரிசோதிப்பது சட்டப்படி அவசியம்.
கடந்த 2023ஆம் ஆண்டு கேமரூன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பத்து குழந்தைகளின் மரணத்திற்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துக்கும் தொடர்புள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, ஏற்றுமதியாகும் இருமல் மருந்துகள் அரசு ஆய்வகங்களில் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகி உள்ளது.