கோவை: எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தவெக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அமைக்கும் வியூகங்களைக் கண்டு நாடே வியக்கும் என அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக குறித்த அண்மைய விமர்சனங்கள் அனைத்துக்கும் கட்சித் தலைவர் விஜய் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“தவழும் குழந்தைகள்தான் பெரியவர்கள் ஆவர். அவ்வாறு பெரியவரான பிறகுதான் தன்னாட்சி நடத்துவார்கள். இதுதான் வழக்கம்.
“நாங்கள் தேர்தல் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும். அடுத்த கூட்டம் எங்கு நடத்தப்படும் என்பது குறித்து தலைவர் விஜய்யிடம் பேசிவிட்டு, பிறகு முடிவு செய்வோம்,” என்றார் செங்கோட்டையன்.
அண்மையில் இவரது ஏற்பாட்டில்தான் ஈரோட்டில் தவெகவின் பிரம்மாண்டப் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனால் தவெக தலைவர் விஜய் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம், தவெக தேர்தல் வியூகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பொங்கல் முடிந்த பிறகு எங்கள் வியூகத்தைப் பார்த்து நாடே வியக்கும்,” என்று புதிராகப் பதிலளித்தார்.

