புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார்.
அதில், திருமயம் அருகே உள்ள சித்தன்னவாசல், நார்த்தாமலை போன்ற பகுதிகளில் காணப்படும் ஈமச் சின்னங்கள் மிகப் பழைமையானது என்றும் கண்ணூர், காப்புக் காட்டுப் பகுதியில் பல்வேறு தொல்லியல் பொருள்கள் மண்ணின் மேற்பரப்பில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் அப்பொருள்கள் சிதைவுறும் நிலையில் உள்ளதால், காப்புக்காட்டில் உள்ள பழைமையான கல் திட்டைகள், கல் வட்டங்களைச் சீரமைத்துப் பாதுகாக்கப்பட்டச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
இம்மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுதாரர் குறிப்பிட்டுள்ள தொல்லியல் சின்னங்களை வனத்துறையும் தொல்லியல் துறையும் இணைந்து வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், மத்திய அல்லது மாநில தொல்லியல் துறை சார்பாக திருமயம் பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

