மதுரை: மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு வெளிநாட்டில் அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை குறித்து முழுமையான மருத்துவ ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், நேரு கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து, அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான துரை தயாநிதி மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துரை தயாநிதி பெயரில் உள்ள ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து துரை தயாநிதியை விடுவிக்கக் கோரி, அவரது சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு விசாரணைக்கு வந்தபோது, துரை தயாநிதி வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் மன ரீதியான பிரச்சினை இருப்பதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கோரினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், துரை தயாநிதியை நேரில் முன்னிலைப்படுத்தி, அவரது மனநிலையை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து, மருத்துவ ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 16ஆம் தேதி தள்ளிவைத்தார்.


