புதுடெல்லி: சிங்கப்பூர், இலங்கையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளைப் பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2020ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இதனையடுத்து ஜெகத்ரட்சகன், அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜெகத்ரட்சகனின் சொத்துகளைப் பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
‘சொத்துகள் பறிமுதல் நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கது அல்ல, அடிப்படை ஆதாரமற்றது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே விதிமீறல்களுக்காக ஏறக்குறைய 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


