சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைக் கட்சிக்கு (விசிக) எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு பொதுத் தொகுதிகள், ஆறு தனித் தொகுதிகள் ஆகும்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த முறை ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இம்முறை தங்களுக்கு இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் அக்கட்சி கோரிக்கை விடுத்தது. எனினும் நீண்ட இழுபறிக்குப் பிறகு எட்டு தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது.
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரசுக்கு 28, விசிகவுக்கு 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொமதேக 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை (மார்ச் 25) தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில், கட்சி நலன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கூட்டணி நலனும் முக்கியமானது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலதுசாரி சக்திகள் காலூன்றக் கூடாது என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர், தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மனநிறைவடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
புதுவை திமுக கூட்டணியில் பிளவு
இதனிடையே புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில், விசிகவுக்கு ஓர் இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்றும் வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும்கூட விசிகவுக்கு எந்த தொகுதி என்பது தெரியவில்லை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய போக்கால் அக்கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக திரு திருமா கூறியுள்ளார். அவரது அறிக்கை திமுக கூட்டணி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
“எனவே, விசிக சார்பில் தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்,” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

