சென்னை: தமிழகத்தில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும் காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதாயக் கொலைகள், திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சில புள்ளி விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு பதிவான வழக்குகள், அவற்றின் தற்போதைய விசாரணை நிலை, அதன் வகைப்பாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் அதில் நகை, பணம் உள்ளிட்ட சொத்துகளை கொள்ளையடிக்கும் விதமாக நடந்த ஆதாயக் கொலைகள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை பத்து விழுக்காடு குறைந்துள்ளதாகவும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
“2023ஆம் ஆண்டு, 83 வழக்குகள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு 75 வழக்குகள் மட்டுமே பதிவாயின.
“கூட்டுக்கொள்ளை தொடர்பாக 2023ஆம் ஆண்டில் 133 வழக்குகள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு 110ஆகக் குறைந்துள்ளது. கொள்ளை தொடர்பாக 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 373 வழக்குகள் குறைந்துள்ளன.
“திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 2023ஆம் ஆண்டு 17,788 வழக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 15,892ஆகக் குறைந்துள்ளது,” என்று திரு சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல் தொடர்பாக, 2023ல் 49,266 வழக்குகள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்பாக 17,789 வழக்குகள் மட்டுமே பதிவானதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாள்கள், பண்டிகைக் காலங்கள், விடுமுறை நாள்கள், அமாவாசை இரவு நேரங்களில் தீவிர சுற்றுக்காவல் பணிகள் வாயிலாக, குற்ற வழக்குகளைக் குறைப்பது சாத்தியமாகி உள்ளதாகவும் காவல்துறைத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.