பயிர்க்கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு மடிக்கணினி: தமிழக அரசு

பயிர்க்கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு மடிக்கணினி: தமிழக அரசு

கோப்புப் படம்: தினசுவடு

07 Nov 2026 - 4:14 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000 வரை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழு விலக்கும் அதற்கு மேற்பட்ட தொகையை கடனாகப் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை மட்டுமே தள்ளுபடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி ரூ. 75,000 வரையிலான தள்ளுபடி சலுகை நேரடியாகக் கிடைக்கும் என்றும்

இத்திட்டத்தின்கீழ் தகுதிபெறும் பயிர்க்கடன்களுக்கான கால அவகாசம் 2025 மே 1 முதல் 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்காக மாநில அரசு சார்பில் ஒட்டுமொத்தமாக ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’

கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் ‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’ செயல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு 2026-27 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் மூலம், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் முதலாம், இரண்டாம் ஆண்டு இளநிலை, பட்டயப்படிப்பு மாணவர்கள் பயனடைவர்.

முந்தைய கல்வியாண்டில் விடுபட்ட மூன்றாம், நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களும் இத்திட்டத்தின்கீழ் மடிக்கணினி பெறத் தகுதிபெறுவர்.

குறிப்பாக, பொறியியல் மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உயர்தரத் தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.

கொள்முதல் பணிகளைத் தரக்கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச் சீரிய முறையில் கண்காணிக்க முதல்வர் தலைமையில் உயர்மட்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்