சென்னை: தமிழக அரசு நிலங்களைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், அந்நிலங்களுக்கான குத்தகை, வாடகைத் தொகைகள் தொடர்பில் பல கோடி ரூபாய் நிலுவை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
பிரபல மன்றங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் உள்ளிட்டவை தமிழக அரசுக்கு ரூ.1,247 கோடி செலுத்த வேண்டி உள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.
அவற்றுள் காஸ்மோபாலிடன் மன்றம், சென்னை ரேஸ் மன்றம் ஆகியவை உள்ளடங்கும் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ரேஸ் மன்றம் மட்டுமே அரசுக்கு ரூ.812 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாக தமிழக நில நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
பிரபல கலாஷேத்ரா, டிஆர்பிசிசி ஆகிய பள்ளிகளும் அரசுக்கு கணிசமான தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது.
வாடகை, நிலக்குத்தகை தொடர்பாக மேற்குறிப்பிட்ட அமைப்புகள் அரசுக்கு ரூ.435 கோடி தரவேண்டியுள்ளது.
காஸ்மோபாலிடன் மன்றம், தமிழ்நாடு கோல்ஃப் மன்றம் (Golf) ஆகியவற்றிடம் இருந்து வாடகையாக மட்டும் அரசுக்கு ரூ.119 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது.
இதேபோல், சென்னை யுனைடெட் மன்றம் (ரூ.24.63 கோடி), காந்திநகர் கிரிக்கெட் மன்றம் (ரூ.2 கோடி), சத்யா ஸ்டூடியோ (ரூ.31 கோடி) தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

