கடலூர்: அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமைதான் இவ்வாண்டு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை.
அது முடிந்ததும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் இறைச்சிக் கடைகளிலும் மீன்பிடித் துறைமுகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்ததாகத் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்துக்களுக்கு முக்கியமான புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. அதனையடுத்து, பெரும்பாலோர் புரட்டாசி மாதத்தில், குறிப்பாக அம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம்.
இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையும் முடிந்ததை அடுத்து, மக்கள் மீண்டும் அசைவ உணவுவகைகளை நோக்கிப் படையெடுத்தனர்.
அவ்வகையில், கடந்த மூன்று வாரங்களாக வெறிச்சோடிக் காணப்பட்ட கடலூர் துறைமுகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பொதுமக்களும் மீன் வணிகர்களும் திரண்டனர்.
கிலோ 350 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை மீன்கள் விலைபோனதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
அதுபோல, கடந்த ஒரு மாதகாலமாக மந்தமாக இருந்த இறைச்சி வணிகமும் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது.
தீபாவளியும் நெருங்கிவிட்டதால் இனி மீன், இறைச்சி வணிகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.