அடையாறு பகுதியில் கொத்து கொத்தாக உயிரிழக்கும் காகம்

1 mins read
e5f62e2d-c16e-4776-b415-e2af5dbef2b4
அடையாற்றில் இருக்கும் இந்திரா நகர் பூங்காவில் மர்மமான முறையில் காகங்கள் உயிரிழந்தன. - படம்: அதிர்வு நியூஸ்
multi-img1 of 2

சென்னை: சென்னை அடையாறு வட்டாரத்தில் உள்ள இந்திரா நகர் பூங்காவில் காகங்கள் கொத்து கொத்தாக விழுந்து உயிரிழக்கின்றன.

இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் உடல்களைத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

ஆய்வு முடிவுகள் வரும் வரை காகங்கள் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அப்பூங்காவில் பணியாற்றிவரும் காவலாளி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த சில நாள்களாகப் பூங்காவில் காகங்கள் விழுந்து இறக்கின்றன. வானிலிருந்து கீழே விழுந்து இறக்கும் காகங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது,”என்றார்.

இதுபற்றி அவ்வட்டாரச் சுகாதார அதிகாரி டாக்டர் ஷீலா, “பூங்காவில் காகங்கள் விழுந்து இறப்பதன் பின்னணியில் அவைகள் தின்ற உணவு விஷமாக மாறி இருக்கலாம். அல்லது மாசுபட்ட தண்ணீரைக் குடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் கால்நடை அதிகாரி ஜே. கமல் உசேன், “ உயிரிழந்த காகங்களின் உடல்களைத் தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வரும்வரை பொதுமக்கள் யாரும் காகங்களைத் தொட வேண்டாம். ஏனென்றால் காகங்கள் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். இதனால் காகங்களை தொடுவதன் மூலம் தொற்று மனிதர்களுக்கும் பரவலாம். எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காகம்உயிரிழப்புநோய்