சென்னை: சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் சுங்கச் சோதனை பணியில் இருக்கும் அதிகாரிகள் பணி நேரத்தில் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு வந்ததும் கைப்பேசிகளை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். பணி நேரம் முடிந்து வீடு திரும்பும்போதுதான் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
அவர்களின் கைப்பேசிகளுக்கு வரும் அழைப்புகள் குறித்து சுங்கத்துறை துணை ஆணையர், இணை ஆணையர் ஆய்வு செய்வர். தங்கக் கடத்தல்காரர்கள் சம்பந்தப்பட்ட அழைப்புகள் எனக் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பணி நேரத்துக்கு இடையே சுங்கச் சோதனை நடக்கும் இடத்திலிருந்து எக்காரணம் கொண்டும் சுங்கத்துறை ஊழியர்களும் அதிகாரிகளும் வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
பணி நேரம் முடிந்த பின்னர், உயரதிகாரிகளின் அனுமதியுடன் அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படும் என்று இந்திய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 267 கிலோ தங்கக் கடத்தல் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க இந்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

