சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து திங்கட்கிழமை புயலாக மாறக்கூடும் என்பதால், தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய-கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய-மேற்கு வங்கக்கடல் பகுதியில் திங்கட்கிழமை புயலாக உருவெடுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் மேலும் வலுவடைந்து வரும் 28ஆம் தேதி காலையில் ஆந்திரக் கடலோரப் பகுதியை ஒட்டி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாகும் இப்புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.
வங்காள மொழியில் இதற்கு ‘பெருங்கடல்’ என்று பொருள்.
இதற்குப் பின்னர் உருவாகும் புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்ற தமிழ்ப் பெயர் வைக்கப்படும் என வானிலை ஆய்வு நிலைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்தார்.
புயல் தீவிரமடைவதைத் தொடர்ந்து, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும்.
மேலும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிகக் கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 25 சென்டிமீட்டர் மழையும், கீழ்கோத்தகிரியில் 20 சென்டிமீட்டர் மழையும், குன்னூரில் 17 சென்டிமீட்டர் மழையும், கோவை மேட்டுப்பாளையத்தில் 15 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
