சென்னை: வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு இந்தியா பரிந்துரைத்துள்ள ‘முரசு’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.
‘முரசு’ புயலின் நகர்வு, தமிழகத்தில் அதன் தாக்கம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள புகழ்பெற்ற வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (’தமிழ்நாடு வெதர்மேன்’), அப்புயலால் தமிழகத்துக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘முரசு’ புயலானது பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தின் தெற்கு, மத்தியக் கடலோரப் பகுதிகளை நோக்கியே நகர அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆந்திரக் கடலோர மாவட்டங்களில் பெருமழை பெய்யக்கூடும்.
இருப்பினும், புயல் ஆந்திரக் கரையை ஒட்டி நகர்வதால், அதன் தாக்கம் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, திங்கட்கிழமை (நவம்பர் 2) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு ஆகிய கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும், வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் பெருங்காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
