தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜனவரியில் 234 தொகுதிகளிலும் சூறாவளிச் சுற்றுப்பயணம்: பழனிசாமி

2 mins read
3331d355-b195-47e2-a737-1fdb12182ad7
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) கூடிய அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: வரும் ஜனவரி இறுதியில் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பழனிசாமி, அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார்.

இவ்விரு குழுக்களின் கூட்டமும் ஒரே அரங்கத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறை.  அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த அக்கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தேர்தலில் சரியான கூட்டணி அமையவில்லை என்று விமர்சித்தனர். கூட்டணி என்பது அவ்வப்போது வரும், போகும். ஆனால் அதிமுக கொள்கை நிலையானது. கட்சியின் பலம் வலிமையானது. எந்தக் கட்சிக்கும் இல்லாத தொண்டர்கள் நிறைந்த ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். தமிழகத்தில் மட்டும் அல்ல. இந்தியாவில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்று பழனிசாமி கூறினார்.

உண்மையான உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி அதிமுக மட்டுமே. அதிமுக ஆட்சி வர வேண்டும் என நினைக்கின்றவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி இருக்கிறோம். நிர்வாகிகள் அதிமுக வாட்ஸ்அப் குழுவில் இணையவேண்டும்.

2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக 1,98,369 வாக்குகள் குறைவாக பெற்ற காரணத்தால் ஆட்சிக்கு வர முடியவில்லை. பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை. 200 தொகுதிகளில் வெற்றி என திமுக கூறுவது அதிமுகவுக்குத்தான் பொருந்தும் என்றார் அவர்.

மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்துவது, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது, தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவது, சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்துவது, வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளைச் சரிசெய்து, நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்