‘டேட்டிங்’ செயலிகள்: திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

‘டேட்டிங்’ செயலிகள்: திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

படம்: இந்தியா டுடே

03 Apr 2026 - 7:52 pm

2 mins read

சென்னை: நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் திறன்பேசிகள், ‘டேட்டிங்’ செயலிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவை திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் பெருக வழிவகுப்பதாக அண்மைய ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஏறக்குறைய 40 லட்சம் பேர் ‘டேட்டிங்’ செயலிகளைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதில் 65 விழுக்காட்டினர் ஆண்கள்; 35 விழுக்காட்டினர் பெண்கள் எனக் கூறப்பட்டது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 148 விழுக்காடு அதிகரித்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயனர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 1 முதல் 1.5 மணி நேரம் வரை அரட்டையில் (Chatting) ஈடுபடுகின்றனர். பிற்பகல் 12 - 3 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் இந்தச் செயலிகளின் பயன்பாடு உச்சத்தில் உள்ளது.

ஆண்கள் 25-30 வயதுடைய பெண்களைத் தேடுகின்றனர். ஆனால், பெண்கள் 30-40 வயதுடைய முதிர்ச்சியான ஆண்களை விரும்புகின்றனர்.

பெண்கள் பெரும்பாலும் மருத்துவர்கள், கணக்காய்வாளர்கள் போன்ற பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் உள்ள ஆண்களையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.

முதலிடத்தில் பெங்களூரு; தமிழகத்தில் காஞ்சிபுரம்

இந்திய அளவில் நகரங்களின் வரிசைப் பட்டியலில் பெங்களூரு - 18 விழுக்காடு, ஹைதராபாத் - 17 விழுக்காடு, டெல்லி - 11 விழுக்காடு, மும்பை - 9 விழுக்காடு என்ற அளவில் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதத் தரவுகளின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவுகளில் இருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ‘இன்டர்நெட் சாட்டிங்’ கலாசாரம், இன்று மெட்ரோ நகரங்களைத் தாண்டி சிறு நகரங்களின் குடும்பக் கட்டமைப்பிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்