திருச்சி: முதுநிலை படிப்பில் சேர, நாடு முழுவதும் நடத்தப்படும் ‘கேட்’ தேர்வில், 105வது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த விஜி.
இவரது தந்தை நீலிவனத்தான் ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. தாயார் அமிர்தவல்லி. விஜிக்கு இரு சகோதரிகள் உள்ளனர்.
உள்ளூர் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை ஆர்வத்துடன் படித்த இவருக்கு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லுாரியில் இடம் கிடைத்தது. அங்கு வேளாண் பொறியியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பை முடிக்க, நடப்பாண்டில் ‘கேட்’ தேர்வு எழுதினார்.
அதில், நாடு தழுவிய அளவில் 105வது இடத்தைப் பிடித்த விஜிக்கு, தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கரக்பூர் ஐஐடி கல்வி நிலையத்தில், நிலம் மற்றும் நீர் ஆதாரங்கள் பொறியியல் துறையில் முதுநிலை படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.
கூலித்தொழிலாளியின் மகளாக பல்வேறு பொருளியல் பிரச்சினைகளைச் சமாளித்து, சாதித்துக்காட்டிய விஜிக்கு பாராட்டுகள் குவிகின்றன.