திருச்சி: டாஸ்மாக் மதுப்புட்டியில் இறந்துகிடந்த தவளையால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மதுப்புட்டியில் இருந்த மதுவைக் குடித்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், சென்னக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல் முருகன். 33 வயது கூலித்தொழிலாளியான அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு திருகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கியுள்ளார்.
பின்னர் இருள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்து அந்த மதுவை குடித்தபோது மதுப்புட்டியில் ஏதோ அடைப்பு இருந்ததை உணர்ந்துள்ளார். இதையடுத்து தன் கைப்பேசியில் இருந்த விளக்கை இயக்கி பார்த்தபோது மதுப்புட்டிக்குள் தவளை ஒன்று இறந்த நிலையில் இருப்பதைக்கண்டு கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
உடனடியாக அதைக் கொண்டுசென்று டாஸ்மாக் கடையில் இருந்த ஊழியர்களிடம் விவரம் தெரிவித்தபோது, வேல்முருகன் கூறியதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் மதுப்புட்டியை அவரிடம் இருந்து பறித்து கீழே வீசி உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தாக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.