விருதுநகர்: தமிழ் நாட்டில் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் கைதிகளை நிரந்தரமாக விடுதலை செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ் நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஷாஜகான், அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என ஆய்வு நடத்தப்படுகிறது என்றும் நிதிநிலை அறிக்கையில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குக் கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு, ‘வெற்றித் தமிழகம்’ என்ற தொலைநோக்குத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது என்றும் அவற்றில் சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களும் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கால் நூற்றாண்டைக் கடந்தும் சிறையில் வாடும் கைதிகளுக்கு வழங்கப்பட்ட இரு மாதப் பிணை விடுப்பு, தேர்தல் நடத்தை விதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார் ஷாஜஹான்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி, லஞ்சம், ஊழல் இல்லாத வகையில் அனைத்து மக்களும் விரும்பும் ஆட்சியாக இருக்கும். முஸ்லிம்களுக்கு வழங்கப்படும், 3.5 விழுக்காட்டு இட ஓதுக்கீட்டை, 5 விழுக்காடாக உயர்த்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் ஷாஜஹான் கூறினார்.
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஷாஜஹான், “தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கெடுத்ததை திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார். மேலும் பேசிய அவர், “இந்தத் தேர்தல் பல சம்பவங்களை அடித்து நொறுக்கியுள்ளது. சாதி, மதம், இனம், மொழி பார்த்து வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. அந்த கணக்குகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்கு, அந்த ‘விசில்’ சின்னத்திற்கு 35 விழுக்காட்டினர் வாக்களித்தனர் எனச் சொன்னால், இது இந்தியாவிலேயே மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய தேர்தலாகத்தான் இந்த அரசியல் களம் அமைந்துள்ளது,” என்றார்.

