தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைந்து வரும் கொலைகளின் எண்ணிக்கை: டிஜிபி மீண்டும் அறிக்கை

2 mins read
330ce2b4-4e66-4b72-b11e-54d0e0c483fe
டிஜிபி சங்கர் ஜிவால். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் கொலை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இது சாத்தியமானதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டைவிட 2024ஆம் ஆண்டில் கொலை, காயம், கலவரங்கள் உள்ளிட்ட குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, காவல்துறை தலைவர் இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டது கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடுகையில், நடப்பு திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக முதல்வர் சட்டப்பேரவையில் குறிப்பிடலாமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், கொலைகளின் நீண்டகால போக்கின் பகுப்பாய்வின்படி, 2017-2020ஆம் ஆண்டில் கொலை வழக்குகள் ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019ஆம் ஆண்டில் 1,745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டியதாக டிஜிபி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

“இருப்பினும், 2021 மற்றும் அதற்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. 2024ஆம் ஆண்டில் மிகக் குறைவாக கொலை வழக்குகள் (1,563 வழக்குகள்) பதிவாகியுள்ளன.

“கடந்த 4 ஆண்டுகளில், காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் பதிவான 2024 ஆம் ஆண்டில், ரவுடி கொலைகளும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளன.

“2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) கொலை வழக்குகள் குறைந்துவரும் போக்கின் தொடர்ச்சியாக, முந்தைய ஆண்டின் (2024) முதல் நான்கு மாதங்களில் 501 கொலைகளுடன் ஒப்பிடும்போது, 483 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன,” என்று டிஜிபி சங்கர் திவால் கூறியுள்ளார்.

ரவுடிகள், பிற சமூக விரோதச் சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் பழிக்குப்பழி, ரவுடி கொலைகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்