சென்னை: பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தைப் பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கா் நிலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிர்வாகத்திடம் கேட்காமல் செய்யப்பட்ட பத்திரப்பதிவு செல்லாததாகவே கருதப்படும் என்று கூறி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
சட்டவிரோதப் பத்திரப் பதிவு தொடர்பாக நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 6ஆம் தேதி ரூ.2 கோடி என நிலத்தைக் குறைவாக மதிப்பீடு செய்து, தனி நபர்கள் இருவரது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதியப்பட்டது.
தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து பழனி கோயிலின் செயல் அலுவலர், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் “பழனி முருகன் கோயில் நிலம் தொடர்பாக தனிநபர் பதிவுசெய்த பட்டா ரத்து செய்யப்படுகிறது. இதில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை இடைநீக்கம் செய்தது மட்டும் போதாது,” என்று தீர்ப்பளித்தனர்.

