சென்னை: தீபாவளிப் பண்டிகை முடிந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்குத் திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இது கடைசி நேரத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) தீபாவளியையொட்டி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற தென் மாவட்ட மக்கள், திங்கட்கிழமை முதல் பணிகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வழக்கமான ₹7,045 கட்டணம் ரூ.17,539 ஆகவும், திருச்சியிலிருந்து சென்னைக்கு வழக்கமான ரூ.4,954 கட்டணம் ரூ.14,000 முதல் ரூ.14,666 வரையிலும் சேலத்திலிருந்து வழக்கமான ரூ.3,832 கட்டணம் ரூ.13,098 ஆகவும் மதுரையிலிருந்து வழக்கமான ரூ.4,673 கட்டணம் ரூ.11,000 முதல் ரூ.11,877 வரையிலும் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.
மேலும் டெல்லி, மும்பை, கோல்கத்தா, அகமதாபாத், புவனேஸ்வர் போன்ற இந்தியப் பெருநகரங்களிலிருந்தும் சென்னைக்குத் திரும்பும் பயணச்சீட்டுகளின் விலை அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழலில், 1937ஆம் ஆண்டின் விமான விதிகளுக்கு மாற்றாக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சால் அறிவிக்கப்பட்ட ‘புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
புதிய விதியின்படி அசாதாரண சூழல்களில் விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்களில் நிபந்தனைகளுடன் தலையிட்டு எழுத்துபூர்வ வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சூழலுக்குப் பொருத்தமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நடப்பில் இருக்கும். எனினும் இது நிரந்தரக் கட்டண வரம்பையோ அல்லது அனைத்துப் பயணச்சீட்டுகளுக்கும் அரசின் முன்அனுமதியையோ ஏற்படுத்தாது, மாறாக, அசாதாரண சூழல், பொது நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்.
மேலும், முன்பதிவு தளங்கள், பயணச்சீட்டுகளில் மொத்தத் தொகையுடன் சேர்த்து அடிப்படைக் கட்டணம், வரிகள், சேவைக் கட்டணங்கள், ரத்து விவரங்கள், பணத்தைத் திரும்பப்பெறும் விதிமுறைகளை வெளிப்படையாகப் பிரித்துக் காட்ட வேண்டும்.
