தீபாவளி வணிகம் ரூ.7 லட்சம் கோடியைத் தாண்டும்: அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு

தீபாவளி வணிகம் ரூ.7 லட்சம் கோடியைத் தாண்டும்: அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு

படம்: தி இந்து

09 Nov 2026 - 8:31 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் நடப்பு ஆண்டில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாடு தழுவிய வணிகம் ரூ.7 லட்சம் கோடியைத் தாண்டும் என அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு கூறியுள்ளது. தலைநகர் டெல்லியில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வணிகம் நடைபெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் ஐந்து நாள்கள் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நீடிக்கும். ஆகஸ்ட் மாதம் ஆயுத பூஜை, நவராத்திரி, தசரா எனத் தொடங்கும் பண்டிகைக் கால விற்பனையில் தீபாவளியே உச்சநிலை வணிகக் காலமாக விளங்குகிறது.

இதுவரை ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் வணிகம் நடந்துள்ளதாகவும் இறுதி விற்பனை ரூ.7 லட்சம் கோடியைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தங்கம், வெள்ளி நகைகளுடன், கைப்பேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோக மின்னணுச் சாதனங்களின் விற்பனை கூடியது. ஜவுளி வகைகளுடன் போனஸ் பணப்புழக்கத்தால் வாகனக் கொள்முதலும் சூடுபிடித்தது. அலங்காரப் பொருள்கள், இனிப்புகள் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்தது.

இந்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதில் பயனீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதாக கூட்டமைப்பு குறிப்பிட்டது.

குறிப்பாக, கைவினைப் பொருள்கள், காதி ஆடைகள், கைத்தறிப் பொருள்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உள்ளூர் தயாரிப்புகளை மக்கள் அதிகளவில் வாங்கியது குறிப்பிடத்தக்க மாற்றம் என்று அமைப்பின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் கந்தேல்வால் கூறினார். இது உள்நாட்டுத் தயாரிப்பாளர்கள். சிறு தொழில்முனைவோருக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் ஊக்கம் அளித்துள்ளது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்