தீபாவளிக்காக சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய திருமாவளவன் வலியுறுத்து

தீபாவளிக்காக சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய திருமாவளவன் வலியுறுத்து

படம்: தி இந்து

07 Nov 2026 - 12:08 pm

2 mins read

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்குத் தடையின்றிப் பயணம் செய்ய வசதியாக, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

தீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்வது வழக்கம். இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நவம்பர் 6 முதல் 10ஆம் தேதி வரை நெடுஞ்சாலைகளில் வழக்கத்தைவிடக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருப்பதே கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முதன்மைக் காரணமாகிறது என்று சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் தொடரும் இந்நிலையால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாவதாகவும், எரிபொருள் விரயமும் சுற்றுச்சூழல் மாசுபாடும் பெருமளவில் அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு சில உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, நவம்பர் 6 முதல் 10 வரை சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றார். மேலும், தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பெருவிழாக் காலங்களில் சுங்கத்தடுப்புகளை முழுமையாகத் திறந்து வைத்து, தடையில்லாப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்