சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டி வருவதையடுத்து ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில், இம்முறை சுமார் 11,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) தொடங்கி, இன்று வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
இதேபோல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,000 பேருந்துகளுடன் கூடுதலாக 700 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
“பயணிகளின் வசதிக்காக ஆங்காங்கே உதவி மையங்கள் அமைத்துள்ளோம். இதுவரை 1.31 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், 70 விழுக்காடு பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்படவில்லை,” என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தீபாவளியையொட்டி வட மாநிலத் தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும், விமானக் கட்டணங்களும் ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்வு கண்டுள்ளதால் என்ன செய்வது எனத் தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.