சென்னை/புதுடெல்லி: தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் வானிலை கண்காணிப்பாளர்கள் பதிவுசெய்த உச்சபட்ச காற்றின் தரக் குறியீடு 1,200 புள்ளிகளைத் தாண்டியது. திங்கட்கிழமை காலை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரபூர்வ தரவுகளின்படி ஒட்டுமொத்த நகர சராசரி 208 ஆக இருந்தது.
விமான நிலையத்தில் சூழ்ந்த அடர்ந்த புகையால் பார்வைத்திறன் குறைந்து 26 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. ராய்ப்பூரிலிருந்து 156 பயணிகளுடன் வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டது. 15 புறப்பாடு சேவைகளும் தாமதமாயின. நள்ளிரவில் புறப்படவிருந்த 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. நகரின் சில சாலைகளிலும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாகப் புகை சூழ்ந்தது.
சென்னையில் தேங்கிய 600 டன் பட்டாசுக் கழிவுகளை அகற்றப் பெருநகர சென்னை மாநகராட்சி 600 தூய்மைப் பணியாளர்கள், 350 வாகனங்கள், 30,000 சிறப்புப் பைகளை ஈடுபடுத்தியுள்ளது.
மேலும், தீபாவளி பட்டாசு வெடிப்பு விதிமீறல் தொடர்பாக சென்னையில் ஒரே நாளில் 237 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் தீக்காயமடைந்த 679 பேரில் 569 பேர் முதலுதவிக்குப் பின் வீடு திரும்பினர்; 110 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகளை மீறி நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், திங்கள் காலை காற்று மாசுபாடு 370 முதல் 404 வரை உயர்ந்தது.
அனைத்துலகத் தரவரிசையில் (IQAir) பாகிஸ்தானின் லாகூரின் 563 என்ற புள்ளிகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது மிக மாசடைந்த நகரமாக டெல்லி பதிவானது. குளிர்காலக் காலநிலையும் வாகனப் புகையும் நிலைமையை மோசமாக்கியதால் பள்ளிகளில் இணைய வகுப்புகளும் மூன்றாம் கட்ட அவசரகாலக் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
மும்பையிலும் நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்தது. லக்னோ, அமிர்தசரஸ், புனே, சூரத், ஜெய்ப்பூர் போன்ற வட, மத்திய நகரங்களிலும் காற்று மாசுபாடு மிக மோசமானது. அதேவேளையில் பெங்களூரு (127), ஹைதராபாத் (120), திருவனந்தபுரம் (67) ஆகிய தென்னக நகரங்கள் மிதமான அளவில் இருந்தன.
