கடலூர்: கடலூரில் சனிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற வடலூர் ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தைக்கு வடலூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, அரசகுழி, பண்ருட்டி, காடாம்புலியூர், கொள்ளுக்காரன்குட்டை, வடக்குத்து, மீன்சுருட்டி, மருவாய், கொலக்குடி, கம்மாபுரம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டுவருவது வழக்கம்.
இந்நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி வழக்கம்போல சந்தை நடைபெற்றது. இதில், வெள்ளாடு, கொடி ஆடு, செம்மறி ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இந்த ஆடுகளை வாங்குவதற்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், கரூர், அரியலூர், மயிலாடுதுறை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.
ஓர் ஆடு குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் தீபாவளிச் சந்தை என்பதால் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் வடலூர் ஆட்டுச் சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

