அரசு அமைவதில் தாமதம், நிர்வாகப் பணிகளைத் தொடங்கிய ஆளுநர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து பல நாள்கள் கடந்தும், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது

அரசு அமைவதில் தாமதம், நிர்வாகப் பணிகளைத் தொடங்கிய ஆளுநர்

படம்: தி இந்து

08 May 2026 - 8:58 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் புதிய அரசாங்கம் அமைவதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அரசு நிர்வாகப் பணிகளைக் கவனிக்கத் தொடங்கியுள்ளார்.

மே 4ஆம் தேதி வெளிவந்த தமிழகத்தில் தேர்தல் முடிவுகளில் எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. அதிக இடங்களைப் பெற்றுள்ள தவெக கட்சியும் 118 இடங்களுக்கான கூட்டணியை முடிவுசெய்வதில் தடுமாறி வருகிறது. அதனால் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

என்றபோதும் அரசாங்க நிர்வாகப் பணிகளில் தொய்வும் ஏற்படக்கூடாது என்பதால் ஆளுநர் அர்லேக்கர் நிர்வாகப் பணிகளை கவனித்துக்கொள்ளத் துவங்கி உள்ளார்.

ஆளுநரின் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை (மே 8) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக லோக் பவன் (மக்கள் மாளிகை) அறிவித்துள்ளது.

தமிழக ஆளுநர் அர்லேக்கர் உடனடியாக பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதாக லோக் பவன் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. புதிய கல்வி அமைச்சர் பொறுப்பேற்கும்வரையில் முடிவுகள் வெளியிடுவதை நிறுத்தி வைப்பது மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையைத் தாமதப்படுத்தும்.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி முடிவுகளை தாமதமின்றி வெளியிடுவது அவசியம் என்பதால் முடிவுகளை வெளியிட ஆளுநர் உத்தரவிட்டார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடின உழைப்பால் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டிய அவர், தோல்வியடைந்தவர்கள் மனச்சோர்வடையாமல் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். வெற்றி மிக அருகிலேயே உள்ளது என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்