டெல்லி சிபிஐ விசாரணை: நேரில் முன்னிலையாகும் செந்தில் பாலாஜி

டெல்லி சிபிஐ விசாரணை: நேரில் முன்னிலையாகும் செந்தில் பாலாஜி

2 mins read
40b03b65-ac65-452a-9b26-dc5cbea32ab8
செந்தில் பாலாஜி. - கோப்புப்படம்: தினமலர்
Google News Preferred Icon

சென்னை: கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு சிபிஐ தரப்பில் இருந்து தமக்கு அழைப்பாணை வந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில், மார்ச் 17ஆம் தேதி தாம் விசாரணைக்கு முன்னிலையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ தமக்கு அழைப்பாணை அனுப்பியது குறித்து சமூக ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மார்ச் 17ஆம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐ அழைப்பாணை அனுப்பியதன் அடிப்படையில், அவர்களின் கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்க இருப்பதாக அவர் தமது சமூக ஊடகப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தவெக தலைவர் விஜய்யை செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) நேரில் முன்னிலையாகுமாறு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ள நிலையில், தமக்கு 15 நாள்கள் அவகாசம் அளிக்குமாறு அவர் கோரியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இரண்டு முறை அவர் சிபிஐ விசாரணைக்கு முன்னிலையாகி இருந்தார். அப்போது அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், தாம் சில ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஜய் கூறியதை அடுத்து, அவருக்கு மார்ச் 10ஆம் தேதி முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டது.

எனினும், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளைச் சுட்டிக்காட்டி, தம்மால் நேரில் முன்னிலையாக முடியவில்லை என்றும் தமக்கு 15 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் விஜய் தமது வழக்கறிஞர் மூலம் சிபிஐக்கு கடிதம் எழுதி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்