சென்னை: தமிழ் நாட்டின் முன்னணி வார இதழான ஆனந்த விகடனின் இணையத் தளம் முடக்கப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்த ஊழியர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா நாடு கடத்தியது. அந்தச் செயலை மத்திய அரசு நியாயப்படுத்தியுள்ளது என்று விமர்சிக்கும் வகையில் ஆனந்த விகடன் ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, ஆனந்த விகடனின் இணையத் தளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. இது மிரட்டும் செயல் என்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
விகடன் ஊடகக் குழுமம் மட்டுமல்ல, பாஜக, ஆர்எஸ்எஸ், அவற்றின் பரிவாரங்கள், அவற்றின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எந்த ஊடகத்தையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை என்பதே அனுபவமாகும்.
அனைத்துலக அளவிலான ஊடக சுதந்திரப் புள்ளிக் கணக்கில், 180 நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா கடந்த 2014ஆம் ஆண்டில் 140வது இடத்தில் இருந்து 2024ஆம் ஆண்டில் 159வது இடத்துக்குச் சரிந்து விழுந்துள்ளது. கௌரி லங்கேஷ் உட்பட இதுவரை 61 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 25க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சிறைத் தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை படுமோசமான நிலவரத்தை வெளிப்படுத்தும் நாடு என நமது நாடு அடையாளப்படுத்தப்படுகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கருத்துரிமை பறிப்பு பாசிச நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் திரு முத்தரசன் கூறியுள்ளார்.