தங்கம் ஓடிக்கொண்டிருக்க, வெள்ளி விரட்டிக்கொண்டு பின்னால் ஓடுவதைப் போல் விலைவாசி தொடர்பாகப் போட்டி நடக்கிறது.
‘தங்கத்தை வெள்ளி விலைவாசியில் வீழ்த்த முடியாது’ என்றாலும்கூட, வெள்ளிக்கும் இப்போது மதிப்பு கூடியிருக்கிறது.
ஒரு காலத்தில் தங்கத்தைவிட வெளிக்குத்தான் அதிக மதிப்பு இருந்தது. காரணம், தங்கம் என்பது ஆடம்பரம், வெள்ளி என்பது அத்தியாவசியம் எனும் நிலை இருந்ததுதான். இன்றும்கூட வெள்ளியின் அத்தியாவசியப் பயன்பாடு கூடிக்கொண்டே இருக்கிறது.
தண்டை, கொலுசு, மோதிரம், தோடு, சங்கிலி, அரைஞாண்கயிறு, பூசைப் பொருள்கள் எனப் பலவகையிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.
உலகின் முதல் மருத்துவ முறை எனப்படும் சித்த மருத்துவத்தில் வெள்ளியைப் பயன்படுத்தினார்கள் தமிழர்கள்.
அதாவது, நோயாளிகளுக்கு வெள்ளிக் குவளையில் நீர் நிரப்பி குடிக்கச் சொன்னார்கள். வெள்ளிக்குச் சுத்தப்படுத்தும் குணம் இருப்பதால் கெட்ட கிருமிகளை அழித்துவிடும்.
மின்சாரத்தை விரைந்து கடத்தும் தன்மை வெள்ளிக்கு உண்டு. அதனால் மின்சாரத்துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இப்போது உலகம் முழுவதும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை நோக்கித் திரும்பியிருப்பதால் வெள்ளியின் தேவை உலக அளவில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிந்தேசர் குர்த் சுரங்கம், உலகின் இரண்டாவது பெரிய வெள்ளி உற்பத்திச் சுரங்கமாகும்.
அதன் வெள்ளி உற்பத்தி 2023 - 2024ல் ஏறக்குறைய 16 மில்லியன் அவுன்ஸ் என்கிறது வேதாந்தா நிறுவனம்.
இந்தியாவின் வெள்ளித் தேவையில் கிட்டத்தட்ட 30% இந்தச் சுரங்கத்தில்தான் உற்பத்தியாகும் வெள்ளி மூலம்தான் ஈடுகட்டப்படுகிறது. அதிலிருந்து இன்னும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு வெள்ளித் தாதுவை வெட்டியெடுக்க முடியும்.
வேதாந்தா ரிசோர்சின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஸிங்க் (zinc) லிமிட்டெடுக்குச் சொந்தமான ராஜ்புரா (ராஜஸ்தான்) சுரங்கத்தில் எடுக்கப்படும் துத்தநாகம், ஈயத்தைச் சுத்திகரிக்கையில் துணைப் பொருளாக வெள்ளி உற்பத்தி செய்யப்படுகிறது.
ராஜஸ்தான் ராஜ்புரா தரிபா சுரங்கம் 2023ல் 1.47 மில்லியன் அவுன்ஸ் வெள்ளியை உற்பத்தி செய்ததாகத் தோராயமாகச் சொல்லப்படுகிறது.
ராஜஸ்தானில் இருப்பது தங்கச் சுரங்கம் என்றாலும் இணைப் பொருளாக வெள்ளி கிடைக்கிறது. ஆனால் இது சிறிய அளவுதான்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய வெள்ளி உற்பத்திச் சுரங்கம் ராஜஸ்தான் ராம்புரா அகுச்சா சுரங்கம், கிட்டத்தட்ட 250 ஆயிரம் அவுன்ஸ் உற்பத்தி செய்துள்ளது.
இப்படி, சிறிய, பெரிய சுரங்கங்களின் மூலம் இந்தியாவில் வெள்ளி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியச் சுரங்கங்களின் வெள்ளித் தேவை ஆண்டுக்கு 6,000 டன். இது ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்தியாவின் வெள்ளிச் சுரங்கங்களில் இருந்து கிடைப்பது ஆண்டுக்கு ஏறத்தாழ 80 டன். இது போதுமானது அல்ல. அதனால் வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்யப்படுகிறது.
உற்பத்தி மற்றும் இறக்குமதி வெள்ளியில் பாதிக்கும் மேல் அணிகலன் செய்வதற்குப் பயன்படுகிறது.
அணிகலன்களுக்கான வெள்ளியில் பெரும்பகுதி தமிழகத்திற்குத்தான் வருகிறது.
தமிழகத்தின் சேலம் மாவட்டம், இந்தியாவிலேயே பெரிய வெள்ளி நகை உற்பத்தி மையமாகத் திகழ்கிறது.
இங்கு தயாராகும் அணிகலன்கள் பல ஆயிரம் தொழிலாளர்களால் கையால் செய்யப்படுகிறது. அதனால் அது கலைநயம் மிக்கதாகவும் உறுதித்தன்மை நிறைந்ததாகவும் உள்ளது.
இதனால் சேலம் வெள்ளி அணிகலன்கள் இந்தியா முழுவதும் வரவேற்புக்கு உரியதாக உள்ளன.
ஏறக்குறைய 50 டன் அணிகலன்கள் சேலத்தில் உருவாக்கப்பட்டு இந்தியா முழுமைக்கும் அனுப்பப்படுவதுடன், சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தங்கத்தின் அச்சமூட்டும் விலை உயர்வும் முதலீட்டாளர்களை ஒப்புநோக்க வைத்துள்ளதால், இந்திய அளவிலும் தமிழக அளவிலும் வெள்ளியில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதனால் இந்திய வெள்ளித் தேவை மேலும் மேலும் அதிகரிக்கக்கூடும்.
இதனால் வெள்ளி விலை உயரும், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ‘தி சில்வர் இன்ஸ்டிடியூட்’ (The Silver Institute) நிறுவனக் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டைவிட 2024ஆம் ஆண்டில் வெள்ளி வணிகத்தில் இந்திய முதலீடு 195% அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் வெள்ளி முதலீடு மேலும் 10% அதிகரிக்கும் என அந்நிறுவனத்தின் ‘உலக வெள்ளிக் கணக்கெடுப்பு - 2025’ அறிக்கை தெரிவிக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளிக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
உலகம் முழுவதிலும் இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட வெள்ளியின் எடை ஏறக்குறைய 1.8 மில்லியன் டன்.
பூமிக்கடியில் வெள்ளியின் இருப்பு இன்னும் ஏறக்குறைய 3.1 மில்லியன் டன் இருக்கும் என அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
வரிவிதிப்புகளால் சிறிது தள்ளாடும் தமிழக வெள்ளிச் சந்தை, அதில் செய்யப்படும் முதலீடுகளால் மீண்டும் உயரக்கூடும். ஆக, வெள்ளி என்பது பொருளியலின் விடிவெள்ளியாக இருக்கும் என்பதில் வேறு பேச்சுக்கு இடமில்லை என்கிறார்கள் துறைசார்ந்த நிபுணர்கள்.