சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதே தங்களுடைய கோரிக்கை என்று அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அந்தக் கோரிக்கையை விசிக இதுவரைக் கைவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால், தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் சலசலப்பு நீடிக்கிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையைக் கைவிடவில்லை என்றும் ஆனால் அதைச் சாத்தியப்படுத்துவதற்கான சூழல் இப்போது இல்லை என்பதை உணர்ந்துள்ளதாகவும் திருமா குறிப்பிட்டார். அதேசமயம் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு உள்ளது என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நம்பி எதிர் அணியினர் நம்புகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் நீடிக்கும் என்றார்.
தமிழக காங்கிரசின் முக்கியப் பொறுப்பாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அதுவே இறுதி முடிவல்ல என்றும் திருமா தெரிவித்தார்.
வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று திருமா நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது திமுகவைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

