சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதன்முதலாகக் குரல் எழுப்பியது தமிழக வெற்றிக் கழகம்தான் என்று அக்கட்சித் தலைவர் விஜய் தெரிவித்தள்ளார்.
இந்த நடைமுறையை எதிர்த்து டெல்லியில் பேரணி நடத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்தது கண்டனத்துக்குரியது என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் பேரணி நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியா முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகமும் அரசியலமைப்புச் சட்டமும் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
“இதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்று முன்பே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்,” என்று விஜய் அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

