ஜனநாயகத் திருநாளில் அதிசயம் எதிர்பார்ப்பு

ஜனநாயகத் திருநாளில் அதிசயம் எதிர்பார்ப்பு

3 mins read
5c411442-7820-4ce0-bf0a-4bd83d494556
‘எஸ்ஐஆர்’ நடவடிக்கையின் பலனாக வாக்குப்பதிவு முதல்முறை 80 விழுக்காட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: செயற்கை நுண்ணறிவு

ஜனநாயகத் திருநாளாகக் கருதப்படும் சட்டமன்றத் தேர்தல் இன்று தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.

எம்முறையும் இல்லாத புதிய அம்சங்களை இன்றைய வாக்குப் பதிவில் காணலாம்.

வாக்குச்சாவடியில் கைப்பேசிக்கும் ‘ஸ்மார்ட் வாட்ச்’க்கும் அனுமதி இல்லை என்பது புதிய நடைமுறை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அலுவலரின் மேற்பார்வையில் கைப்பேசி வைப்பகம் இருக்கும். அவரிடம் கைப்பேசி, ‘ஸ்மார்ட் வாட்ச்’சைக் கொடுத்துவிட்டு ‘டோக்கன்’ பெற்றுக்கொண்டு, வாக்களித்து முடித்ததும் டோக்கனைக் கொடுத்து அவற்றைத் திரும்பப் பெறலாம்.

அஞ்சல் வாக்குகளில் அதிரடி மாற்றமாக, காவல்துறை, தீயணைப்புத் துறை போன்றவை உள்ளிட்ட ஐந்து துறைகளின் ஊழியர்கள் இம்முறை கூடுதலாகச் சேர்க்கப்பட்டு அவர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சமாக 1,200 பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் அவரவர் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு குடிநீர், நிழற்குடை, அமருவதற்கு நாற்காலி போன்ற வசதிகளுக்குத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளதும் புதியதுதான்.

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மூலம், ‘செயல்படாத’ (inactive) வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதால் இம்முறை வாக்குப்பதிவு விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகாலமாக வாக்களிக்காதவர்கள், உயிருடன் இல்லாதவர்கள், முகவரி மாறியவர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஏறத்தாழ 80 லட்சம் பெயர்கள் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளன. இறுதியாக வெளியிடப்பட்ட பட்டியலின்படி, 5 கோடி 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் (5.73 கோடி) வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் 2.93 கோடி பெண்கள், 2.80 கோடி ஆண்களோடு 7,728 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.

2021 தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தவர்களின் எண்ணிக்கை 6.29 கோடி. அவர்களில் பலர் ‘செயல்படாத’ வாக்காளர்களாக இருந்தனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், பதிவாகும் வாக்குகளின் விகிதம் கணித ரீதியாக, முதல்முறை 80 விழுக்காட்டைத் தாண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9ல் பதிவான 91.2% வாக்குப்பதிவு என்னும் அதிசயம் அதற்கு முன்னுதாரணமாக உள்ளது. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும் போலிப் பெயர்களும் அதிகம் இருந்தால் வாக்குப்பதிவு விகிதத்தில் உண்மை நிலவரம் வெளிப்படாது என்கிறது தேர்தல் ஆணையம்.

இதற்கு முன்னர் 2011 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குகளே அதிகபட்சம் ஆகும். அதன் பின்னர், 2016 தேர்தலில் 74.26%, 2021 தேர்தலில் 73.63% என அது குறைந்து காணப்பட்டது.

இம்முறை பல லட்சம் பெயர்கள் நீக்கப்பட்ட அதேவேளை, கிட்டத்தட்ட 27.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில், 12.51 லட்சம் பேர் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்களாக உள்ளனர்.

வாக்குச்சாவடி காணவிருக்கும் இளம் தலைமுறையினரிடம் அரசியல் விழிப்புணர்வு இம்முறை அதிகம் காணப்படுகிறது. வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்ட விழிப்புணர்வுப் பிரசாரம் காரணமாகவும் வாக்குப்பதிவு அதிகரிக்கும் நிலை உள்ளது.

சென்னையிலும் பெரிய ஊர்களிலும் வேலைக்காகவும் இடம்பெயர்ந்தும் உள்ள ஏராளமானோர் கடந்த இரு நாள்களாக சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் வாயிலாக மட்டும் 1.89 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். வாக்களிக்கும் ஆர்வத்தையே இது காட்டுகிறது. 2021 தேர்தலில் ஏறத்தாழ நான்கு லட்சம் பேர் வாக்களிக்கச் சொந்த ஊர் திரும்பினர்.

மொத்தத்தில், திருப்பம் தருமா இத்திருநாள் என்பதே தமிழக வாக்காளர்களின் கேள்வி. விடைதெரிய காத்திருப்போம். -திருநா

குறிப்புச் சொற்கள்