சென்னை: தமிழகத்தில் தற்போது டெங்கி, சளிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநிலப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் ஏறக்குறைய 5,000 பேர் வரை சிகிச்சை பெற்று வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் காய்ச்சல் பரவல் தடுப்பு முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“இருமல், தொண்டை வலி, ஒவ்வாமை, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் உள்ளவர்கள் அவற்றை அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவேண்டும்,” என அத்துறையின் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் டெங்கிக் காய்ச்சல் பரவல் அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. நடப்பாண்டிலும் இப்பாதிப்பு அதிகமாக இருப்பதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் சீராக அதிகரித்து வருகிறது.
தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் இதுகுறித்த எண்ணிக்கை தெரியவில்லை.
மாநிலத்தில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளவர்கள் உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் பொது சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.