துணை முதல்வர் பதவிக்கு விஜய்யிடம் கட்சிகள் பேரம்

துணை முதல்வர் பதவிக்கு விஜய்யிடம் கட்சிகள் பேரம்

2 mins read
a24141cf-6e9f-4a55-b77d-a971740e8179
காங்கிரஸ், பாமக, விசிக ஆகிய கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. - கோப்புப் படம்: புதிய தலைமுறை

சென்னை: னித்து ஆட்சியமைக்கும் அளவுக்குத் தமிழக வெற்றிக் கழகத்துக்குச் (தவெக) சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தற்போது அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், மேலும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் சிக்கலின்றி ஆட்சி நடத்த முடியும்.

இதையடுத்து, காங்கிரஸ், பாமக, விசிக ஆகிய கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

இதில், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க எந்தவித நிபந்தனையுமின்றி ஒப்புக்கொண்டதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால், பாமக தரப்பிலோ, துணை முதல்வர் பதவியைத் தன் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அக்கட்சி ஐந்து தொகுதிகளில் வென்றுள்ள நிலையில், மனைவி சௌமியாவைத் துணை முதல்வராக்குவதே அன்புமணியின் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

குறைவான எம்எல்ஏக்களை வைத்துள்ள கட்சி, இவ்வளவு பெரிய நிபந்தனை விதிப்பதை விஜய்யால் ஏற்க முடியவில்லை என்று தெரிவிக்கும் அக்கட்சி வட்டாரங்கள், அடுத்த கட்டமாக கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகின்றன.

காங்கிரஸ் கட்சி ஐந்து தொகுதிகளிலும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தரப்புக்கு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இவை அனைத்துமே சமயச் சார்பற்ற கட்சிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை சுமுகமாக அமையும் எனத் தவெக தலைமை எதிர்பார்க்கிறது.

அதேநேரம் அதிமுக, பாஜக உதவியோடு விஜய் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது.

எனினும், இப்போது ஆட்சியமைக்கக் கைகொடுக்கும் கட்சிகள், எத்தகைய நிபந்தனைகள் விதிக்கும் என்பது தெரியாத நிலையில், ஆட்சி அமைத்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் விஜய்க்குச் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், முக்கியமான துறைகளைத் தவெக வசம் வைத்திருக்கவே விஜய் விரும்புவார் எனத் தெரிகிறது.

அநேகமாக, புதன்கிழமை (மே 6) தன் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக, சமயச் சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து முடிப்பார் எனத் தவெக வட்டாரங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்