பொள்ளாச்சி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் வகையிலும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சியில் திமுகவினரும் மொழி ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்தைக் கறுப்பு மை பூசி அழித்தனர்.
திமுக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய அவர்கள் ரயில் நிலையத்துக்கு முன்பும் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என முழங்கினர்.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை தி.மு.க.வினர் அழித்த அங்கு எவ்விதப் பரபரப்பும் ஏற்படவில்லை.
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது.
இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி பணத்தை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
மத்திய அரசும் - தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியாது,” என்று அறிவித்தார். இதையடுத்து, தமிழகத்தில் மும்மொழிக் கல்விக் கொள்கைக்கும் இந்தி மொழி திணிப்புக்கும் எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மத்திய அரசு இந்தியைத் திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை காலை பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.
ஆசிரியை இடைநீக்கம்
இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி விஷ்யாஷ்ரம் பள்ளியில் இந்தி மொழியில் கவிதை சொல்லாததால், 3ஆம் வகுப்பு மாணவனைத் தாக்கிய இந்தி ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். மாணவனைப் பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் எனவும் மிரட்டி தொடர்ந்து தாக்கியதாக பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, பள்ளி நிர்வாகம் அவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.