சென்னை: சென்னையில் உள்ள ‘விஐடி’யில் தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர்கள் சங்கம், தேசிய கல்வியாளர் மகாசங்கம் மற்றும் விஐடி சென்னை ஆகியவை இணைந்து நடத்திய ‘வளர்ந்த இந்தியா’ நோக்கிய செயல் திட்டம் - ஒரு பல்துறை அணுகுமுறை” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாட்டின் நிறைவு விழா 27.7.2025ஆம் தேதி நடந்தது.
மாநாட்டுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “தமிழ்நாடு அறிவு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த மாநிலம். நல்லாட்சியின் மரபுக்குப் பெயர் பெற்ற பூமியாக உள்ளது.
“கல்வி, அனைத்து முன்னேற்றத்திற்கும் மையமாக விளங்கி வருகிறது. கல்வியின் மூலம் ஆசிரியர்கள் உண்மையான தேசத்தைக் கட்டியெழுப்புபவர்கள். எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் கூட்டு முயற்சியின் மூலம் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நாம் உருவாக்க முடியும்,” என்றார்.
மாநாட்டில், முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) தலைவர் பேராசிரியர் மமிதாலா ஜெகதேஷ் குமார், காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தின் துணை வேந்தர் பஞ்சநாதம், விஐடி இணை துணை வேந்தர் முனைவர் டி.தியாகராஜன், தேசிய கல்வியாளர்கள் சங்கத்தின் அகில இந்திய இணை அமைப்புச் செயலாளர் குந்தா லட்சுமண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.