சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இணைந்ததாக டிடிவி தினகரனின் அறிவித்துள்ளார்.
கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அன்போடு வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக இடம்பெற்று வருகிறது.
“அதிமுக - பாஜக கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறோம். தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு ஆதரவைத் தெரிவிக்கிறோம். விட்டுக்கொடுத்துப் போகின்றவர்கள் கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டை. பழைய விஷயங்களை நினைத்து, கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு இந்த முடிவெடுக்கிறோம்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறினார்.
புதன்கிழமை (ஜனவரி 21) தமிழகம் வந்துள்ள தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் டிடிவி தினகரன் பேச்சு நடத்தினார்.
அமமுகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழகத்தில் உள்ள 52 சட்டமன்றத் தொகுதிகளில், 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு அமமுக பிரித்த வாக்குகளும் காரணமாக பார்க்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமமுகவும் அதிமுகவும் பெற்ற வாக்குகளை இணைத்தால் திமுக கூட்டணி பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தனர்.
அந்தவகையில், டிடிவி தினகரன் இணைந்துள்ளது அதிமுகவுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இக்கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) பிரதமர் மோடி தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணியில் இணையும் கட்சிகள் பற்றிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஏற்கெனவே 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் நாம் தமிழர் கட்சி, பாஜக கூட்டணியில் இணையும் சாத்தியம் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.

