பெரியகுளம்: ஆண்டிபட்டியில் நடைபெற்ற தமிழக அரசு விழாவில் திமுகவைச் சேர்ந்த எம்பியும் எம்எல்ஏவும் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க நிகழ்ச்சியின் போது, வரவேற்புப் பதாகையில் மக்களவை உறுப்பினரின் பெயர், படம் இல்லாதது குறித்து மேடையில் ஆட்சியர் முன்னிலையில் தங்க. தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை நான்தான் வழங்குவேன் என்று கூறி, தங்க. தமிழ்ச்செல்வன் கையிலிருந்த சான்று அட்டையை ஆ. மகாராஜன் பறித்து பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திட்டத் தொடக்க விழா நிகழ்ச்சி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.
திமுகவைச் சேர்ந்த எம்.பியும் எம்.எல்.ஏவும் மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.