திருச்சி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்காகப் பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாகப் பேசிய திரைப்பட இயக்குநர் மோகன், பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்துத் தெரிவித்துள்ளார். பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாகப் பேசியுள்ளார்.
இயக்குநர் மோகனின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாகப் பழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி எஸ்.பி. வருண் குமார் உத்தரவின் பேரில் சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி தனிப்படைக் காவல்துறை அதிகாரிகள் அவரைச் சென்னையில் கைது செய்து திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.
இயக்குநர் மோகனின் சர்ச்சைக் கருத்துக்குச் சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட பாஜகவினர் கைதுநடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாகத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் மோகனைக் கைது செய்ததற்கான காரணம் எதையும் அவருடைய குடும்பத்தினருக்கு காவல்துறை தெரிவிக்கவில்லை. அவர் இப்போது எங்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்ற விவரமும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்க்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது.
கஞ்சா கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாகச் செய்து வருகிறது,” என கூறியுள்ளார்.