கோவை: தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வித்துறைக்குக்கீழ் பலதுறைத் தொழிற்கல்லுாரிகள், சிறப்புக் கல்வி நிலையங்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் அலுவலக இளநிலை உதவியாளராகப் பணிபுரிய 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். உயர் பதவிகளில் பலர் 10ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்தோர் இதைத் தெரிவித்திருப்பதாக தினமலர் போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையை உடனடியாக மாற்ற, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசின் அனைத்து துறைகளிலும், இளநிலை உதவியாளர் பணியிடத்திலிருந்து பதவி உயர்வுக்கு தமிழ்நாட்டு அலுவலக நடைமுறைத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த அரசாணை, தொழில்நுட்பக் கல்வித் துறையில் பின்பற்றப்படுவதில்லை என்று பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கல்வித் துறையில் காலியாக இருப்பவற்றில் 50 விழுக்காட்டுப் பணியிடங்களை நேரடி நியமனம் வாயிலாக நிரப்பவேண்டும் என்ற அரசாணையும் பின்பற்றப்படுவதில்லை; அப்படியிருந்தும் அவர்களில் சிலர், லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் பெறுவதாக பேராசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதனால், அரசாங்கத்துக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் அவர்கள் சுட்டினர்.
தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருமாறும் பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

