சென்னை: சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தனித்துவமிக்க ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
‘தி இந்து’ குழுமத்தின் 2025ஆம் ஆண்டுக்கான 13வது இலக்கியத் திருவிழா-2025 சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா வெங்கட சுப்பாராவ் கலையரங்கத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது.
சுகாதாரம் தொடர்பான அமர்வில், உலகச் சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தமிழக அரசின் சுகாதாரச் செயலர் சுப்ரியா சாஹு, தி இந்து நாளிதழின் ஆசிரியர் (சுகாதாரப் பிரிவு) ரம்யா கண்ணன் ஆகியோர் கலந்துரையாடினர்.
அப்போது பேசிய விஞ்ஞானி சௌமியா, “தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம், பல்லுயிர்களின் அழிவு மற்றும் நிலம், நீர் மாசுபடுதல் ஆகியன பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
“மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்நலம் குறித்த ஒருங்கிணைந்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது அவசியமாகும். அதைக் கொண்டு விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள் மற்றும் நமது உணவுப் பாதுகாப்பு குறித்த சிக்கல்களை எதிர்கொள்ள முடியும். மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தனித்துவமிக்க ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
இலக்கியத் திருவிழாவின் இறுதி நாளில் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய அமர்வுகள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

