சென்னை: நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், ஞாயிற்றுக்கிழமை முதல் அமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.
நடிகர் சத்யராஜ் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது மகள் திவ்யா தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்-அமைச்சர், கழகத் தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
அந்த நிகழ்வில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.